இலக்கிய உலா

SS

தமிழுக்கு அமுதென்று பெயர்

" பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது (நானாற்பதில் ஒன்று), இனியவை நாற்பது (நானாற்பதில் ஒன்று), கார் நாற்பது (நானாற்பதில் ஒன்று), களவழி நாற்பது (நானாற்பதில் ஒன்று), ஐந்திணை ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), ஐந்திணை எழுபது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமொழி ஐம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), திணைமாலை நூற்றைம்பது (ஐந்திணை தொகுப்பில் ஒன்று), முப்பால் (திருக்குறள்), திரிகடுகம், ஆசாரக் கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி ஆகியவையாகும்.

Sunday 26 February 2017

தற்குறிப்பேற்ற அணி - எளிய பாடல்களுடன் விளக்கம்

         தற்குறிப்பேற்ற அணி 


"தற்குறிப்பேற்ற அணி என்பது இயல்பாக நடக்கும் ஒரு நிகழ்வின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றுவதாகும்."

சிறிய எடுத்துக்காட்டின் மூலம் இங்கு பார்ப்போம்.

              ஊரின் தென்கோடியில், ஒரு தலைவனது பிறந்த நாளை முன்னிட்டு, பிறந்த நாள் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து, தயார் நிலையில் இருக்கின்றனர்.



              ஊரின் வடகோடியில், ஒரு பாரம்பரிய மிக்க தலைவன் தன் உலக வாழ்வை நீத்து, இறுதியாத்திரையாக அவனது உடல் எடுத்து செல்லப்பட்டு கொண்டிருக்கிறது.



அப்போது அவ்வூரில், மேகம் கறுத்து, சிறு மழைத்தூறலை தூவுகிறது…

               வடகோடியில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தவர்கள். கூறுகிறார்கள்… ” மாபெரும் தலைவன் மறைந்ததை எண்ணி வானம் கண்ணீர் மழைத்துளிகளைப் பொழிகின்றன.. என்று!

தென்கோடியில்,தலைவனின்பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருந்தவர்களோ…
என் தலைவனின் பிறந்த தினத்தை வானம் பன்னீர் தெளித்து கொண்டாடுகிறது என்று கூறுகிறார்கள்..
                                                                                    ஆக மழைப்பொழிவது என்பது இயற்கை, ஆனால்,. தென்புலத்தாரும், வடபுலத்தாரும் அவரவர் தன் குறிப்பை ஏற்றி கூறுகிறார்கள் – இது தற்குறிப்பேற்ற அணியை எளிதில் புரிந்து கொள்ள ஒர் எளிய எடுத்துகாட்டாய் அமையும்.
 எ.கா.1:

    


 போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட
                                                                                         சிலப்பதிகாரம்
விளக்கம்:
கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையில் கொல்லப்படுவான் என்று முன்னமே அறிந்து வர வேண்டாம் என அக்கொடிகள் எச்சரிப்பதாகக் குறிப்பேற்றிக் கூறுவார்.
எ.கா.2:




     தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்
கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை
வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்
கூவினவே கோழிக் குலம்.
                                                                                                      நளவெண்பாவிளக்கம்:
                        நளன், தமயந்தியை நீங்கி, காட்டில் விட்டுச் சென்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைக் கண்ட புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக கூறுகிறார்.
எ.கா.3:

காரிருளில் கானகத்தே காதலியை கைவிட்ட
பாதகனை பார்க்கப் படாதேன்றோ - நாதம்
அழிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவன் ஓடி
ஒழிக்கின்ற தென்னோ உரை.
                                                                                                நளவெண்பாவிளக்கம்:







              நளன் கடலோரமாகச் செல்கின்றான். நண்டுகள்("அலவன்") தம் வளையில் இருந்து வெளிக்கிட்டு கடல் நாடிச் செல்கின்றன. இதை கண்ட புலவர், மனைவியைக் காட்டில் விட்டுச் சென்ற பாதகனை பார்க்கக் கூடாது என்றே நண்டுகள் வெளியேறிச் செல்கின்றன என்கிறார்.

திரைப்படப்பாடல்களில்”தற்குறிப்பேற்ற அணி

இளையநிலா பொழிகிறது என்ற பாடலில் வரும் பாடல்கள் எனக்கு மிக மிக பிடித்த வரிகள்


முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ”




              என்ற பாடலின் கருத்துக்கள் , மேகங்கள் முகவரியைத் தொலைத்து விட்டு அலைந்து திரிந்து அழுகின்றதால் வருகிற கண்ணீர்தான் மழையா? என்று தன் குறிப்பை ஏற்றி, தற்குறிப்பேற்ற அணியை அசாதாரணமாய் கையாண்டிருப்பார் கவிஞர்
                                                                                                                   - இரா.மு
- ( அணி இலக்கணம் தொடரும்)

No comments:

Post a Comment