“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்
கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்.”

என்றார் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை அவர்கள். இன்றைய இயந்திர வாழ்க்கையில் மக்கள் பொருள் வேண்டி, வேலையைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கின்றனர்.

கைத்தொழிலின் ' :
இன்று நாம் கற்கும் ஏட்டுக்கல்வி பின்னர் நமக்கு ஏதாவது ஒரு வேலையினைப் பெற்றுத் தரலாம். அல்லது வேலையே கிடைக்காத நிலையும் ஏற்படலாம். படித்துவிட்டு வேலையின்றித் தவிப்போர் ஏதேனும் ஒரு கைத்தொழில் செய்யத் தெரிந்தவராக இருந்தால் கவலைப்படத் தேவையில்லை.

எதிர்கால வாழ்வு குறித்தும் கவலையோ வருத்தமோ கொள்ள வேண்டியதில்லை. ஆகையால் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கைத்தொழிலைத் தெரிந்து வைத்துக் கொள்ளுதல் நல்லது.

கைத்தொழில்கள் :
கைத்தறி நெசவு, செக்காடுதல், பாய் பின்னுதல், கூடைப் பின்னுதல், தச்சு வேலை செய்தல், கயிறு திரித்தல், மட்பாண்டம் செய்தல், தீப்பெட்டி செய்தல், மரவேலை செய்தல், தேனீ வளர்த்தல், தச்சுவேலை செய்தல் போன்ற கைத்தொழில்களை எளிதாகக் கற்றுக் கொண்டு பயன் பெறலாம்.

கைத்தொழிலின் பயன்கள் :
“கைத்தொழிலைக் கற்றுக் கொள்வதால் தனிமனித வருவாய் பெருகி வளம் பெறலாம். அனைத்து மக்களுக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கின்றது. கிராம மக்கள் வேலை தேடி நகரை நோக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் ஊர்களில் இருந்தே வேலை செய்யலாம். தொழில் வளம் பெருகுவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.

இன்றைய கைத்தொழில்கள் :
கால மாற்றம், இட வேறுபாடுகளுக்கேற்ப வாழ்க்கை முறையில் பயன்பாட்டுப் பொருள்கள் மாறுகின்றன. புதிய நாகரிகம், புதிய விருப்பங்கள் என எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே உள்ளன. இம்மாற்றங்களுக்கேற்ப கணினி பழுதுபார்த்தல், செல்பேசி பழுது பார்த்தல், ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்தல், எம்ப்ராய்டிங், சிறுசிறு உணவகங்கள் வைத்தல். இவையெல்லாம் இன்றைய சிறந்த கைத்தொழில்கள் ஆகும்.

முடிவுரை :
நம் வாழ்வை உயர்த்துவது உழைப்புதான். இவ்வுழைப்பை மூலதனமாக வைத்து ஏதேனும் ஒரு கைத்தொழிலைக் கற்றுக் கொண்டு முன்னேறுவோம். படித்த படிப்பிற்கு வேலை தேடி அலையாமல் கைத்தொழில் மூலம் பொருள் ஈட்டி வளம் பெறுவோம்.