தமிழி என்ற சொல் எங்கிருந்து வந்தது ?
முற்காலத் தமிழகத்தில் தமிழ் மொழியினை எவ்வாறு எழுதினார்கள் தெரியுமா? பனைஓலைச் சுவடி, நடுகல், பானை ஓடுகள், பறைகளின்மீது கல்வெட்டுப் பொறிப்பு, செப்பேடு ஆகிய ஊடகங்களைப் பயன்படுத்தி தமிழர்கள் எழுதினார்கள். ஓலைச் சுவடிகள் காலவெள்ளத்தில் அழிந்து போயின. அகழ்வாய்வுகளில் பானை ஓடுகள் கிடைத்து வருகின்றன. எழுத்துப் பொறிப்புப் பெற்ற நடுகற்கள், எழுத்துப் பொறிப்புப் பெற்ற பாறைகள், பலகைக் கற்கள், சிற்பங்கள், செப்பேடுகள் ஆகிய ஆவணங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் தொல்லியல் அறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இந்தக் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழி (தமிழ் பிராமி), தமிழ், வட்டெழுத்து ஆகிய எழுத்து (வரி) வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளனர்
.மு. எட்டாம் நூற்றாண்டு மதிக்கத்தக்க பண்டைய தமிழி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடு
முதலில் குறிப்பிட்ட தமிழி (தமிழ் பிராமி) வரி வடிவத்தில் கல்வெட்டுகள் பண்டைக் காலத்து சமணர் குகைகள், பாளிகள், பாறைகள் ஆகிய ஊடகங்களின் மீது பொறிக்கப்பட்டன. இதுவே காலத்தால் முந்தைய தமிழ் வரிவடிவம் என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இதற்கு முந்தைய வரிவடிவமாகக் தமிழ்க் குறியீடுகள் கருதப்படுகின்றன. இந்தத் தமிழ் வரி வடிவம் தமிழி மற்றும் தமிழ் பிராமி ஆகிய இரு பெயர்களில் அழைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு பெயர்கள் உள்ளது என்றால் இருவேறு சாரார் இருக்கவேண்டும் அல்லவா?ஆமாம் ஒரு சிலர் தமிழி என்று குறிப்பிடுகிறார்கள். வேறு சிலரோ தமிழ் பிராமி என்றே குறிப்பிட்டு வருகிறார்கள். ஏன் இந்தக் கருத்து வேறுபாடு?
மௌரியப் பேரரசன் அசோகனின் காலத்தில் பல சிறப்பியல்புகளைத் தன்னகத்தே கொண்டு வலிமை வாய்ந்த பேரரசாக மௌரியப் பேரரசு திகழ்ந்தது. அசோகப் பேரரசர் கலிங்கப் போரினால் தனக்குள் ஏற்பட்ட விரக்தியினை விட்டகலும் நோக்கில் தர்ம நெறிகளைப் பின்பற்றினார். இந்த தர்மத்தை நிலைநாட்ட பல்வேறு அரும்பணிகளை ஆற்றினார். தன்னுடைய தர்மத்தை மக்களிடையே பரப்பும் நோக்கில் தன்னுடைய செய்தியினை பல கல்வெட்டு சாசனங்களை நாடெங்கும் பொறித்து வைத்தார். அசோகன் காலத்திய அரசியல், இம்மன்னன் கடைப்பிடித்த மத சகிப்புத்தன்மை, நிர்வாக முறைகள், விரும்பி ஏற்படுத்திய மாற்றங்கள் போன்றவற்றை இக்கல்வெட்டுச் சாசனங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் இந்தச் சாசனங்கள் கண்டறியப்பட்டன. இந்தச் சாசனங்கள் பிராமி என்னும் வரி வடிவத்தில் பொறிக்கப்பட்டிருந்தன.
இதே அசோகனது காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் கல்வெட்டுகள் தமிழகத்தில் இருந்த இயற்கை குகைத் தளங்களிலும் கண்டறியப்பட்டன. தமிழகத்தின் குகைத்தள கல்வெட்டு வரி வடிவங்களுக்கும் அசோகனது கல்வெட்டு சாசன வரி வடிவங்களுக்கும் சில ஒற்றுமை இருப்பது கண்டறியப்பட்டது. பிராமி எழுத்து வடிவம் வடநாட்டிலேயே தோன்றியது என்றும் இதன் அடிப்படையிலேயே தமிழகத்தின் குகைத்தளங்களில் பிராமி வரி வடிவக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன என்ற வாதமும் முன் வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அசோகனது சாசன வரி வடிவத்திற்கு வடபிராமி என்று பெயரிட்டு அழைத்தார்கள். தமிழகத்தின் குகைத்தள கல்வெட்டு வரி வடிவத்திற்கு தென்பிராமி என்று பெயரிட்டு அழைத்தார்கள்.
தமிழகக் குகைக் கல்வெட்டு காட்டும் தென்பிராமி வரி வடிவத்திற்கும் அசோகனது சாசனம் காட்டும் வட பிராமி வரி வடிவத்திற்கும் சிற்சில நிலைகளில் வேறுபாடுகள் இருப்பதைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொல்லியல் அறிஞர்களாகிய ஐராவதம் மகாதேவன் அவர்களும் டாக்டர். இரா. நாகசாமி அவர்களும் கண்டறிந்தனர். புகழ்பெற்ற கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் தமிழகத்தின் குகைக் கல்வெட்டு வரி வடிவங்களைத் தமிழ்-பிராமி என்று பெயரிட்டு அழைத்தார்.
டாக்டர் இரா. நாகசாமி அவர்கள் தமிழகக் குகைத்தளங்களில் கண்டறியப்பட்டுள்ள பிராமி வரி வடிவத்தில் தமிழ் மொழிக்கான தனித்தன்மைகள் இருப்பதனைக் கண்டறிந்தார். தமிழ்-பிராமி வரி வடிவத்தை வட பிராமி வரி வடிவத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் நோக்கில், தமிழ்-பிராமி வரி வடிவத்திற்கு தமிழி என்று பெயரிட்டு அழைப்பதே சிறப்பானது என்ற வாதத்தை முன் மொழிந்தார். தமது வாதத்திற்கு வலு சேர்க்க இரண்டு சான்றுகளையும் எடுத்து வைத்து விளக்கியுள்ளார்.
சமவயங்க சுத்த என்பது கி.மு. முதல் நூற்றாண்டில் பாலி மொழியில் எழுதப்பட்டசமண சமய நூலாகும். இந்த நூலில் 18 வகை வரி வடிவங்கள் (எழுத்துகள்) பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றாக ‘தம்ளி’ என்ற எழுத்து வடிவமும் குறிக்கப்பட்டுள்ளது. தமிழ் என்பதை அக்காலச் சமணர்கள் தம்ளி என்றே ஒலித்துள்ளனர்.
கி.பி.5 ஆம் நூற்றாண்டில் ‘லலித விஸ்தாரம்’ என்ற பௌத்த நூல் இயற்றப்பட்டுள்ளது. பிராகிருத மொழியில் உள்ள இந்நூலில் தமிழ் எழுத்துகள் "தமிழி", "திராவிடி" என்று குறிப்பிடப்படுகின்றன. திராவிடி என்பது பிற்காலத்தில் புழக்கத்திற்கு வந்த சொல்லாகக் கருதப்படுகிறது.
பொருந்தல் அகழாய்வில் கண்டறியப்பட்ட, முதல் நெல் மாதிரிக்கான காலக்கணிப்பை வெளியிடப்பட்டது. இந்த காலக்கணிப்பின் அடிப்படையில் ஐராவதம் மகாதேவன் மற்றும் டாக்டர். சுப்பராயலு ஆகியோர், தமிழ் பிராமி அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்ற கருத்தை மறுத்துள்ளனர். திரு. கே.வி. இரமேஷ், இயக்குநர், அகழாய்வுத்துறை (ஓய்வு) தமிழ் பிராமி எழுத்து அசோகன் பிராமிக்கு முற்பட்டது என்று சான்றுகளுடன் நிறுவியுள்ளார். மாங்குளம் தமிழ் கல்வெட்டுப்பொறிப்பு அசோகன் காலத்திற்கு முந்தியது என்பது இவர் வாதம். பொருந்தல் கண்டுபிடிப்புகள் இவர் கருத்திற்கு வலு சேர்ப்பதாகவும் இவர் கூறுகிறார்.
மாங்குளம் தமிழ் பிராமி கல்வெட்டு, தமிழ் சங்க காலத்தை (400 BCE- 200 CE) சேர்ந்தது.
பார்வை:
- தமிழ் எழுத்தின் பழமை. கணியன் பாலன் கீற்று 08 ஜூலை 2012
- சங்ககாலத் தமிழ் எழுத்துக்கள். மா.பவானி. தமிழ் இணையக் கல்விக் கழகம்.
- An epigraphic perspective on the antiquity of Tamil.Iravatham Mahadevan The Hindu. June 24, 20